Friday, 31 July 2015

tamil sculpture

எழுத்தோலைகள் (ஓலைச்சுவடிகள்) பற்றிய அரிய தகவல்கள்


பாறைகளில் எழுதி வந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தத் தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் வரை பனையோலையில் எழுதுகின்ற முறை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் இருந்திருக்கிறது. இவ்வாறு எழுதப்பட்ட அனைத்தும் எழுத்தோலைகள் எனப்படுகின்றன.
*எழுத்தோலைகளில் அமைப்பு, செய்தி போன்றவைகளுக்கேற்ப அவை வகைப்படுத்தப்பட்டன.
*நீட்டோலை
திருமணம் மற்றும் இறப்புச் செய்திகளுக்கான ஓலை “நீட்டோலை” என அழைக்கப்பட்டன.
*மூல ஓலை
ஓலைச் செய்தியைப் படியெடுத்து வைத்துக் கொள்ளும் முறை அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. இந்த ஓலைகளை “மூல ஓலை” என அழைத்தனர்.
*சுருள் ஓலை
ஓலை ஆவணங்கள் நாட்டுப்புற மகளிர் அணிந்து வந்த சுருள் வடிவமான காதோலை போல் சுருட்டி வைத்துப் பாதுகாக்கப்பட்டன இவை “சுருள் ஓலைகள்” எனப்பட்டன. இதை “சுருள்பெறு மடியை நீக்கி” என பெரியபுராணத்திலுள்ள பாடல் மூலம் அறிய முடிகிறது.
*குற்றமற்ற ஓலை
மூளியும் பிளப்பும் இல்லாத ஓலை “குற்றமற்ற ஓலை” எனப்பட்டது.
*செய்தி ஓலைகளின் வகைகள்
எழுத்தோலைகளில் உள்ள செய்திகளைக் கொண்டும் அவை தனிப் பெயர்களில் அழைக்கப்பட்டன.
*நாளோலை
தமிழகத்திலுள்ள கோவில் செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓலை “நாளோலை” எனப்பட்டது.
*திருமந்திர ஓலை
அரசனது ஆணைகள் எழுதப்பட்ட ஓலை “திருமந்திர ஓலை” எனப்பட்டது. இதை எழுதுவதற்காக அரசவைகளில் ஓலை நாயகம் என்பவர் இருந்தார். அரசனது ஆணைதாங்கிய எனப் பொருள்படும் “கோனோலை”, “சோழகோன் ஓலை” போன்ற சொற்கள் செப்பேடுகளில் காணப்படுகின்றன.
*மணவினை ஓலை
திருமணச் செய்தியைத் தெரிவிக்கும் ஓலை “மணவினை ஓலை” எனப்பட்டது. இதன் மூலம் திருமணச் செய்தி உற்றார் உறவினர்க்குத் தெரியப்படுத்தியது.
*சாவோலை
இறப்புச் செய்திகளைக் கொண்டு சென்ற ஓலை “சாவோலை” எனப்பட்டன.
*இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் சுமார் 30,000 ஓலைச்சுவடிகள் பதிப்பிக்கப்படாமல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பின்வரும் விகிதத்தில் இந்தியாவில் ஓலைச்சுவடிகள் உள்ளன:
மருத்துவம் – 50%
சோதிடம் – 10%
சமயம் – 10%
கலை, இலக்கியம் – 10%
வரலாறு – 5%
இலக்கணம் – 5%
நாட்டுப்புற இலக்கியம் – 10%
தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகள் உள்ள இடங்கள்:
*சென்னை
சென்னைப் பல்கலைக்கழகக் கீழ்த்திசைச் சுவடி நூலகம்
உ. வே. சா. நூல் நிலையம்
பிரமஞான சபை நூலகம்
தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம்
ஆசியவியல் ஆய்வு நிறுவனம்.
*காஞ்சிபுரம்
காமகோடி பீடம், ஸ்ரீ சங்கராசாரியார் மடம்.
*பாண்டிச்சேரி
பிரஞ்சிந்திய கலைக்கழகம்.
*விருத்தாசலம்
குமார தேவ மடாலயம், விருத்தாசலம்.
*திருச்சி
குமார தேவ மடாலயம், துறையூர்
*தஞ்சை
சரசுவதி மகால் நூலகம்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தருமபுர ஆதீன மடாலயம், மயிலாடுதுறை
ஸ்ரீ காசி மடம், திருப்பனந்தாள்
திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை
*மதுரை
தமிழ்ச்சங்கம், மதுரை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை
*கோவை
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம், பேரூர்.
*ஈரோடு
கலைமகள் கல்வி நிலையம், ஈரோடு

No comments:

Post a Comment